Sunday, August 8, 2021

இருபதாம் நூற்றாண்டு தமிழக கலாசார வரலாற்றில் சிறுபத்திரிகை இதழ்களும் திராவிட இயக்கமும்

இருபதாம் நூற்றாண்டு தமிழக கலாசார வரலாற்றில் சிறுபத்திரிகை இதழ்களும் திராவிட இயக்கமும் ராஜன் குறை கட்டுரை சுருக்கம்: சிறுபத்திரிகை இதழ்கள் என்பன நவீன கால தனிமனிதவாதம் மற்றும் சமூக அரசியல் அடிப்படைகளின் மீது அதிருப்தி கொள்ளும், கடுமையாக விமர்சிக்கும் நவீனத்துவ கலை இலக்கிய போக்குகளின் களம். மற்றொருபுறம் மிகவும் பிற்பட்ட சாதீய, ஆணாதிக்க சமூகத்திலிருந்து மக்களாட்சி என்ற நவீன கால இலட்சியத்திற்கு தமிழ் சமூகத்தின் வெகுஜன பரப்பினை தகவமைத்த வரலாற்று இயக்கம் திராவிட இயக்கம். இவை இரண்டுமே முற்றுப்பெறாத இலக்கு கொண்டு தொடரும் வரலாற்று உந்துவிசைகள் என்பது வெளிப்படாது. இந்த இருவேறு கலாசார வரலாற்று பின்புலங்களால், உந்துவிசைகளால் பெருமளவு விலக்கம் கொண்டிருந்தாலும், பல்வேறு புள்ளிகளில் இணைவும் கொண்டவைதான் சிறுபத்திரிகை இயக்கப் பரப்பும், திராவிட இயக்கப்பரப்பும். காரணம் தத்துவ தளத்தில் நவீன கால பிரக்ஞைக்கும், நவீனத்துவ கலை, இலக்கிய பிரக்ஞைக்கும் இடையேயான உறவுகள் மிகவும் சிக்கலான இணை-முரண் இழைகளால் உருவானவை. ஆனால் தமிழகத்தில் கலை இலக்கிய தூய்மைவாதம் சமூகவியல் பார்வையும், வரலாற்றுப் பார்வையுமற்று மேட்டிமைவாதமாக பரிணமித்து, பன்மைத்துவ அழகியல் பார்வையற்று வெகுஜன, ஜனரஞ்சக கலை இலக்கியத்தை காழ்ப்புடன் அணுகும்போதும், நிராகரிக்கும்போதும் பார்ப்பனீய மீட்புவாதம் சிறுபத்திரிகை மேட்டிமைவாதத்துடன் கைகோர்க்கிறது. அதன் வலதுசாரி முகம் சமீபத்தில் மறைந்த வெங்கட்சாமிநாதன். அதன் வாரிசாக தனக்குத்தானே இட்டுக்கொண்ட இடதுசாரி முத்திரையுடன் தோன்றியிருப்பது பி.ஏ.கிருஷ்ணன் என்ற புதிய முகம். ***** இரண்டு பெரிய அதிசயங்கள் என கருதத்தக்கதாயிருந்த “இரயிலும் தந்தியும் இந்த நாட்டிற்கு வந்த” 1855 ஆம் ஆண்டு பிறந்தவர் உ.வெ.சாமிநாதைய்யர். ”என் சரித்திரம்” என்ற அவரது வாழ்க்கை வரலாற்றை படித்தால் அவருடன் சேர்ந்து நாமும் இருபதாம் நூற்றாண்டு தமிழகத்தினுள் நுழையலாம். அதாவது இன்று நமக்கு தமிழில் கிடைக்கக்கூடிய சுயவரலாற்று யுகசந்தி வாழ்க்கைகளில் இது முதன்மையானது என்று சொல்லலாம். தமிழகத்திற்கு உள்ளேயே எத்தனை கலாசார வகைபாடுகள்! உதாரணமாக பெரம்பலூர் பகுதியில் பெருந்தனக்காரர்களான தனியார் இல்லங்களில் கம்ப ராமாயண சொற்பொழிவுகள் செய்த அனுபவங்களை உ.வே.சா மாயவரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கூறும்போது பிள்ளை சொல்வார் “காட்டு பிரதேசங்களென்று நாம் சொல்கிறோம். அங்கேதான் ஜீவகாருண்யமும் அன்பும் நிரம்பியிருக்கின்றன. நாகரிகம் அதிகமாக அதிகமாக சுயநலமும் அதிகமாகிறது. நாகரீகமுள்ள இடங்களில் உபகார சிந்தையுடையவர்களை அபூர்வமாகத்தான் பார்க்கிறோம்.” மாயவரம் நாகரீகத்தின் மையம். அரியலூரும், பெரம்பலூரும் காட்டுப்பிரதேசம். இப்படியாக வகைப்பட்டிருந்த தமிழகத்தில் ஓலைச்சுவடியிலிருந்து பண்டைய இலக்கியங்களை அச்சுத்தாளுக்கு கொண்டுவந்த கால கட்டம் சார்ந்தது அவரது வாழ்க்கை. அந்த பணியில் அரும் பெரும் பண்டைய இலக்கிய பிரதிகளை ஊர் ஊராக அலைந்து சுவடிகளை சேகரித்து பிரதிகளை ஒப்பிட்டு சரிபார்த்து அச்சாக்கியதால் தமிழ் தாத்தா என்று அழைக்கப்பட்டவர். ஊருக்கோர் சுவடிக் கட்டாக பல்வேறு பாடபேதங்களுடன் இருந்த பிரதிகள், அச்சிற்கு பிறகு திடமானதோர் பொதுவடிவம் பெற்றது நவீன கால உருவாக்கத்தின் அங்கமாகவும், சிறந்த உருவகமாகவும் விளங்குகிறது. சஞ்சய் சுப்ரமண்யம் உள்ளிட்ட வரலாற்று ஆசிரியர்கள் சிலர் முன்னோடி நவீன (early modern) கூறுகள் பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இந்திய சமூகங்களில் தென்படுவதாக வாதிட்டாலும், நவீன சமூகம் என்பதை அறிதல், உற்பத்தி. நுகர்வு, அதிகாரம் ஆகிய அனைத்தும் பொதுமைப் படுத்தப்பட்ட சமூகம் எனவும்; அடையாளமற்ற தனி நபரை அடிப்படை அரசியல் அலகாகவும், அடையாளமற்ற அருவமான சட்டத்தின் ஆட்சியை மொத்த அரசியல் பரப்பாகவும் கொண்ட சமூகம் எனவும் வரையறுத்தால் இந்த நவீன சமூக உருவாக்கம் தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் கதியில் நிகழ்ந்ததாகவே கொள்ள முடியும். நவீன சமூக உருவாக்கத்தை புரிந்துகொள்ள ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகளை கணக்கில் கொண்டால்தான் படிப்படியாக அது எப்படி உருவானது என்பதையும் நாம் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியும். உலக அளவில் நாம் நவீனம் (modernity) என தொகுத்துக்கொள்ள முடிவது என்ன என்பது குறித்து பல வியாக்கியானங்களும், கருத்து மோதல்களும், சர்ச்சைகளும் உள்ளன. ஆனால் ஏதோவொரு விதத்தில், மேற்கண்ட வரையறையைப்போல, இந்த கேள்விக்கு விடை சொல்லாமல் இருபதாம் நூற்றாண்டில் நவீன தமிழகம் உருவான முறையினை புரிந்துகொள்வதோ, விவாதிப்பதோ கடினம். கடந்த ஐநூறு ஆண்டுகளில் நவீன காலம் என்று ஒன்று தோன்றியதனை குறித்த தத்துவார்த்த புரிதல்களை உருவாக்கிய சிந்தனையாளர்களுள் முக்கியமானவர்களும், ஃபிரெஞ்சு தத்துவவாதிகளுமான ஃபூக்கோ மற்றும் தெல்யூஸிடமிருந்து இதற்கான சில அடிப்படைகளை இங்கே தொகுத்துக் கொள்கிறேன். நவீன கால உருவாக்கம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் இரண்டு அச்சுகளைக்கொண்டு புரிந்துகொள்வது தெளிவைத்தரும். ஒரு முக்கியமான அச்சு தனி நபர் உருவாக்கம். இன்னொரு முக்கியமான அச்சு அந்த தனி நபர்களின் ஒருங்கிணைப்பான நீதிபரிபாலன இறையாண்மையும், அனைவர் நல்வாழ்வுக்கான மொத்த நிர்வாக பொறுப்பும் கொண்ட அரசு. இப்படிச்சொல்லும்போது அது என்ன தனி நபர் உருவாக்கம் என்ற குழப்பம் முதலில் வரும். நவீன காலத்திற்கு முன்னால் என்ன மனித உயிரிகள் ஒட்டிக்கொண்டா திரிந்தன என்று கேட்கலாம். மனித உயிரிகளின் செயல்பாடுகள் கூட்டுவாழ்க்கையினுள் புதைந்திருந்தன என்பது ஒரு பதில். அவர்களுள் தனித்துவமிக்க மனிதர்கள் இருந்தார்கள்; அவர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள். சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் ஒரு தனித்துவமிக்க மனிதர். பல்வேறு கோயில்களில் காணப்படும் அற்புதமான சிலைகளை வடித்தவர்களும் தனித்துவமிக்க மனிதர்கள்தான். ஆனால் அவர்கள் பெயர்களை நாம் அறிவதில்லை. இப்படி நம்மால் அறிந்துகொள்ளக் கூடிய, அறிந்துகொள்ள முடியாத தனித்துவமிக்க மனிதர்கள் ஏராளமோனார் எல்லா காலங்களிலும் வாழ்ந்தாலும் அவர்கள் தனி நபர்களாக இல்லாதிருக்க காரணம், அவர்கள் சமூக இயக்கத்தினுள், கூட்டு வாழ்வினுள் கலந்தியங்கியே தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள் என்பதுதான். ஒருவன் தன் தந்தையை பின்பற்றி வாழக்கற்றுக்கொள்வான்; சுற்றத்தினரின் அறிவுரைகளையே தனது அறிதலாகக் கொள்வான். பெண்பால் உயிரி அன்னை மற்றும் சுற்றத்தினரின் எண்ணங்களை சுவீகரித்து வாழ்வாள். ஒரு உயிரியின் தனிப்பட்ட கருத்து விருப்பு வெறுப்பு ஆகியவை குழும, சமூக இயக்கத்தின் முன் முக்கியமற்றவை. ஆனால் நவீனம் உருப்பெற்ற போது தனி நபர் என்ற ஒற்றை மானிட உயிரியின் முக்கியத்துவம் பெரிதும் வலுப்படுத்தப் பட்டது. எனவே இந்த தனி நபர் அச்சினை முதலில் அலசிப்பார்த்து புரிந்துகொள்ளாமல் நம்மால் நவீனம் என்பதன் அடிப்படையினை காண முடியாது. கீழே பல்வேறு கூற்றுக்களில் நவீன காலத்தின் தனி மனிதன் என்ற அச்சின் வர்ணனைகளை, வரையறைகளை தர விரும்புகிறேன். இவை தேகார்த் முதல் லதூர் வரையிலான பல்வேறு தத்துவியலாளர்களின் சிந்தனைகளிலிருந்து தொகுக்கப்பெற்றவை என்றாலும் இது போன்ற பட்டியல்கள் முழுமையானவை அல்ல. சுட்டிகள் மட்டுமே. தொடர்ந்த பரிசீலனையின் மூலமே நாம் முழு விரிவாக்கத்தை அடைய முடியும். 1) தனி நபர் என்ற உயிரியல் அலகே இறையாண்மையின் அலகு. அது தனக்குள் சிந்தனையின் சேகரம் கொண்டதென்பதால் அறிதலின் ஊற்றாகவும், கூற்றின் மூலமாகவும், சுதந்திர செயலியாகவும் உள்ளது. இதன் சுதந்திர இயக்கமே உயர்ந்த மானுட இலட்சியம். 2) குடும்பம், சமூகம் எல்லாம் இந்த அறிதல்/ கூற்று/ செயலின் எழுவாய்களான தன்னிலை ஒருண்மைகளுக்கு (individual subject) இடையே உருவாகும் ஒப்பந்தங்களால் கட்டமைக்கப்பட்டவை. 3) ஒவ்வொரு செயலியும் சுதந்திரமாக அந்த ஒப்பந்தத்தை ஏற்கின்றது. மறு பரிசீலனை செய்கிறது. ரத்து செய்கிறது. மண ஒப்பந்தம் கூட இப்படிப் பட்டதாகத்தான் இருக்க வேண்டும். 4) இந்த கூற்று/செயல்-எழுவாய்-தனி செயலிகளின் சுதந்திரமானது அரசியல் ரீதியாக அவற்றின் அடிப்படை உரிமைகளால் அறியப்படும். அவை விருப்பப் படி எந்த கருத்தையும், நம்பிக்கைகளையும் பின்பற்றவும், அதன்படி இயங்கவும் சுதந்திரம் பெற்றவை. 5) மிக முக்கியமாக தனது திறனால் ஈட்டும் பொருள்களை தனது தனிச் சொத்தாக வைத்துக்கொள்ளும் உரிமை பெற்றவை என்பதுடன் தனது வாரிசுகளுக்கு அவற்றை விட்டுச்செல்லும் உரிமை பெற்றவை. அரசனோ, வேறு எவரோ நிலங்களையோ சொத்துக்களையோ கையகப்படுத்துவது உரிமை மீறலாகும். 6) இந்த கூற்று/செயல் எழுவாய் செயலிகள் எல்லாம் அருவ தளத்தில் சமமானவை. நடைமுறையில் அதிகாரப் பரவல் நிறையவே மேடு பள்ளமாக இருந்தாலும், கருத்தாக்க அளவில் அனைவரும் சமமே. 7) தனி மனித அறிதல்களை பொதுவில் தொகுத்துக்கொண்டு அறிவுசேகரத்தை செயலாக்க முடிவதால், இயற்கை என்பது மனிதனின் அறிதலுக்கும் செயலுக்கும் கட்டுப்பட்டது. மனிதன் தன் செயலால், செயற்கையால் இயற்கையை வெல்லலாம், ஆளலாம். மனிதன் இயற்கையின் அங்கமென்றாலும் தன்னிச்சையான சுதந்திரம் பெற்ற அங்கம். அதே சமயம் இயற்கை என்று மனிதன் அறிவது அவன் அறிதலின் அங்கம் என்றாலும், அது தன்னிச்சையான மனிதனுக்கு வெளியிலான இருப்பு கொண்டது. தன்னையே பரிசீலித்துக்கொண்டு சிந்தித்து இயங்கும் மானுட செயலிக்கும், தன்னுணர்வற்ற யாந்தீரிக செயல்பாடுகளாலான இயற்கைக்கும் இடையிலான எல்லைக்கோடு முழுமுற்றானது. மனிதன், இயற்கை இரண்டையும் கடவுளே உருவாக்கியிருந்தாலும் இந்த எல்லைக்கோட்டினை மனிதன் புரிந்துகொண்டபின் பின் கடவுள் இயற்கையை மனிதன் கையாளத் தந்துவிட்டு ஒதுங்கிக்கொண்டார் என்றுதான் கொள்ள வேண்டும். 8) மேலே கூறியவற்றை ஆழ்ந்து பரிசீலித்தால் நவீனத்தின் வெளிப்புற வியக்திகளான மக்களாட்சி அரசியல், முதலீட்டிய உற்பத்தி முறை- நுகர்வு, அறிவியல்-தொழில்நுட்ப மேலாதிக்கம் ஆகிய மூன்றுமே இந்த தனி நபர் உருவாக்கத்துடன் இணைந்திருப்பதாக காணலாம். இது முதலில் சிறுகச்சிறுக பதினாறு, பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் நிகழ்ந்தது எனலாம். நவீன அரசுருவாக்கம் என்ற அச்சு ஐரோப்பாவில் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் மன்னருக்கும், பிரபுக்களுக்குமான உறவு நிலைகளில் மாற்றம், கடல் கடந்த வர்த்தகத்தின் காரணமாக உருவான தொழில் முனைவோர்களின் அதிகரிக்கும் செல்வாக்கு, ஐரோப்பிய வர்த்தக நலன்களால் நிகழ்ந்த காலனிகளின் உருவாக்கம், அறிவியல் தொழில்நுட்ப உடைப்புகளால் உருவான புதிய தொழில்கள், நிலம் சார்ந்த அதிகார மையங்களான பிரபுக்களுக்கும், பூர்ஷ்வாக்கள் என்று மார்க்ஸால் அழைக்கப்பட்ட தொழில் முதலீட்டாளர்களுக்கும் இடையிலான முரண்களின் வெளிப்பாடு ஆகிய பல்வேறு போக்குகளின் ஊடாக, மெல்ல மெல்ல மன்னரும், கிருஸ்துவ மத நிறுவனங்களும் கையகப்படுத்தியிருந்த அதிகாரத்தை மக்களாட்சி வடிவில் மறு உருவாக்கம் செய்வது நிகழ்ந்தது. இங்கிலாந்தில் உருவான புதிய நில உடமைச்சட்டங்கள் சத்தமில்லாமல் நிகழ்த்திய புரட்சியை, பெரும் வெடிச்சத்தமாக ஃபிரெஞ்சுப் புரட்சி நிகழ்த்தியது. பொருளாதார அடிப்படையில் இது மார்க்ஸ் வர்ணித்தபடி நில உடமைச்சமூகம் தகர்ந்து முதலீட்டிய தொழில்மயமான சமூகம் உருவாதல் என்றாலும், அறிதல் குறித்த, வாழ்தல் குறித்த மிகப்பெரிய அணுகுமுறை மாற்றங்கள் பல்வேறு தளங்களிலும் நிகழ்ந்ததை நுட்பமாக உணரவேண்டும். இதன் பொருட்டே ஃபூக்கோ பைத்தியம் (Madness) பற்றிய கருத்தாக்கங்கள் எப்படி மாறின, குற்றம்-தண்டனை குறித்த கருத்தாக்கங்கள் எப்படியெல்லாம் மாறின, நோய்-குணப்படுத்ததுல் தொடர்பான மாற்றங்கள் என்ன என்பதையெல்லாம் விரிவாக ஆராய்ந்தார். இவையனைத்தும் சேர்ந்து உருவாக்கியது என்னவென்றால் மனித வாழ்க்கையை பொது நிர்வாகம் செய்யும் பிரம்மாண்டமான அரசினை கட்டமைத்ததுதான். இத்தகைய வாழ்வியல் பொது நிர்வாகத்தை Govermentality என்று பெயரிட்டு வரையறுத்தார் ஃபூக்கோ. ஒரு புறம் அனைத்து சுதந்திரங்களுக்கும் பாத்தியதையுள்ள தனி நபர், இன்னொருபுறம் வாழ்வின் பல்வேறு/அனைத்து அம்சங்களையும் தன் கட்டுக்குள் கொண்டுவரும் பிரம்மாண்டமான பொது அரசு நிர்வாகம். வரலாற்றின் வேறெந்தக் காலத்திலும் இவ்வளவு விபிரீதமான அதிகார அமைப்பு நிலவியதில்லை என்றார் ஃபூக்கோ. ஐரோப்பாவும், இருபதாம் நூற்றாண்டு தமிழகமும் தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டு கண்ட மாற்றங்கள் தமிழ் சமூகத்தின் இயக்கப்போக்கிலோ, பரிணாம வளர்ச்சியிலோ மட்டுமே நிகழவில்லை என்பதை மறுக்க முடியாது, வெள்ளையர்களின் ஆதிக்கம் நிகழாவிட்டால் ஒருவேளை அப்படி தன் போக்கில் ஒரு நவீனத்தை தமிழகம் உருவாகப்பெற்றிருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பதினெட்டாம் நூற்றாண்டில் ராபர்ட் கிளைவ் ஆற்காட்டுப் போரில் பெற்ற வெற்றிகளின் விளைவாக கிழக்கிந்திய கம்பெனி என்ற ஆங்கிலேயே வர்த்தக நிறுவனத்தின் ஆதிக்கம் தமிழகத்தில் துவங்கியது. கம்பெனி வரி வசூல், நிர்வாகம் என்பது மெள்ள, மெள்ள பரவியது. அது பெரிதும் வலுப்பெற்று 1858-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மன்னரின் நேரடி ஆட்சிக்குள் தமிழகம் வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழப் பேரரசை வீழ்த்திய பாண்டியர்கள் அடுத்த நூற்றாண்டில் பலவீனப்பட்டு சிதறிப்போனார்கள். அதன் பின் தமிழகத்தில் ஒரு பேரரசு உருவாக்கம் என்பது நடைபெறவில்லை. மதுரை நாயக்கர்களின் இருநூறு ஆண்டுகால ஆட்சி என்பது வலுவான அரச மையத்தை உருவாக்கியதாக சொல்லமுடியாது. பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையில் மராத்தியர் ஆட்சியும். ஆற்காட்டில் நவாப்களின் ஆட்சியும் தொடங்கியது. விரைவில் அனைத்தும் கம்பெனியின் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டிற்கு வந்தது. கம்பெனி மூலமாக அறிமுகமான ஐரோப்பிய நவீன உருவாக்கம், பிரிட்டிஷ் ஆட்சியில் உருவான பொருளாதாரக் கட்டுமானங்கள், நீதிபரிபாலன இறையாண்மை, மக்கள் நல வாழ்வியல் பொது நிர்வாக அரசு, அடிப்படைக்கல்வி, உயர்கல்வி இவற்றையொட்டியே தமிழகத்தில் நவீன காலம் கட்டமைக்கப்பட்டது. தமிழகத்தில் நவீன கால உருவாக்கத்தை எப்படி உருவகம் செய்வது? மிக அடர்த்தியாக மக்கள் வாழும் பெரும் கலாசார நிலப்பரப்பு தமிழகம். அதில் நவீன காலம் என்பது ஏதோ ஒரு பொத்தானை அழுத்தினால் எரியும் விளக்குபோல தோன்ற முடியாது. உண்மையில் இருபதாம் நூற்றாண்டு முழுவதுமே படிப்படியாக நவீனம் சிறு சிறு அலை, அலையாக பரவியதாகத்தான் பார்க்கவேண்டும். தரங்கம்பாடியில் அச்சு இயந்திரம் பதினேழாம் நூற்றாண்டிலேயே நிறுவப்பட்டாலும் செய்தித்தாள் என்ற ஒன்று பரவலான பொது ஊடகமாக சாத்தியமானது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான். இது உண்மையைலேயே பரவலாக மக்களை சென்று அடையும் சாத்தியம் உருவானது இருபதாம் நூற்றாண்டின் மத்தியில்தான். அச்சு ஊடகங்களை போலவே நவீன உயர் கல்வி அமைப்புகள் உருவானதும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான்; அது பரவலானது இருபதாம் நூற்றாண்டின் மத்தியில்தான். மற்றொருபுறம் பல கிராமங்களில் பண்ணையடிமை முறை ஒழிந்து, விவாசய வேலைக்கு நாள் கூலி பணமாகக்கொடுப்பது என்ற மாற்றம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறுபதுகளில், எழுபதுகளில்தான் நிகழ்ந்துள்ளது. விவசாயத் தொழிலாளர்களிடம் பணப்புழக்கம் என்பது தொடங்கியபிறகுதான் கிராமங்களில் பெட்டிக்கடை, டீ கடை. சைக்கிள் கடை போன்றவை உருவாகின்றன. பல்வேறு சிறுநகரங்களை ஐம்பதுகளில் எட்டிய மின்சாரம், கிராமங்களை எட்டியது எழுபதுகளில்தான். 1967-இல் புதிதாக ஆட்சிக்கு வந்த தி.மு.க அடிக்கட்டுமானங்களின் முன்னேற்றத்தில் புது ரத்தம் பாய்ச்சியது. பல இடங்களில் பேருந்து தடங்கள் எழுபதுகளில்தான் போடப்படுகின்றன. கிராமத்து விளைபொருள்களை சந்தைக்கு கொண்டு செல்லும் சாத்தியங்கள் அதிகரிக்கின்றன. ஆரம்ப நிலைப்பள்ளிகள் பெரும்பாலான கிராமங்களில் உருவானது எண்பதுகளில்தான். எம்.ஜி.ஆரின் பங்களிப்பாகிய சத்துணவு நிறைய ஆரம்பப் பள்ளிகள் உருவாகக் காரணமாகியது. இதையெல்லாம் கூறுவது எப்படி சென்னையில் விளக்குப்போட்டவுடன் தமிழகம் முழுவதும் நவீனமாகிவிடவில்லை என்பதை மனதில் கொள்ளத்தான். இதைத்தவிர நாம் மேலே கண்டபடி தனி நபர் உருவாக்கம், மொத்த நிர்வாக அலகாக அரசு உருவாக்கம் ஆகிய இரண்டும் இருபதாம் நூற்றாண்டிலும் மெதுவாகத்தான் நிகழ்ந்தது. கலாசார ரீதியாக இதில் இருந்த சிக்கல்கள் ஏராளமானவை. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிலவிய ஆணாதிக்கமும், ஜாதீயமும் தனி நபர் உருவாக்கத்தை சாத்தியப்படுத்த பெரும் தடையாக இருந்தன. பெண்களின் பொதுவெளி பிரவேசம், கல்வி போன்றவை அந்நிய கலாசாரமாக, ஐரோப்பிய இறக்குமதியாக பார்க்கப்பட்டது. உயர்கல்வி பெற்றவர்களும்கூட தங்களை குடும்ப அதிகாரத்திற்குள்ளும், ஜாதி அதிகாரத்திற்குள்ளும் குறுக்கிக் கொள்பவர்களாகவே இருந்தார்கள். பொதுவெளி என்ற அளவிலும் சிக்கல்கள் கடுமையாக இருந்தன. சமூகம் பிரதேச ரீதியாகவும், ஜாதி மத ரீதியாகும் பிரிந்து பற்பல மூடிய குழுக்களாக இருந்தனவேயன்றி, அனைவரும் பகிர்ந்துகொள்ளும் பொதுவெளி என்பது குறைவாகவே இருந்தன. பல்வேறு குழுக்களிடையே நல்லிணக்கமும், கலாசார பரிவர்த்தனையும் இருந்தன. ஆனாலும் பொதுவெளியாக ஒரு ஊடகப்பரப்பு நிகழ்வதற்கு இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை காத்திருக்கவேண்டியிருந்தது. உண்மையில் இதை அச்சு ஊடகங்கள் சாதித்ததைவிட, நாடகம், சினிமா போன்ற கலைகளே அதிகம் சாதித்தன என்றால் மிகையில்லை. குறிப்பாக தமிழ் சினிமா என்பதே மக்களுக்கும் நவீனத்திற்குமான பாலம் என்றால் மிகையாகாது. மக்களுக்கு நவீனத்தை அறிமுகம் செய்வதாகவும், நவீனத்தை விவாதிப்பதாகவும், தங்களுக்கு உரிய விதத்தில் நவீனமடைய சொல்வதாகவும் கதையாடல்களை உருவாக்குவதே தமிழ் சினிமாவின் தலையாய பணியாக இருந்து வந்துள்ளது. தமிழ் சினிமாவை மக்கள் கொண்டாட காரணமாக இருந்தது என்னவென்றால் தமிழ் சினிமா மக்கள் நோக்கிலிருந்து நவீனத்தை அணுகியது; நவீனத்தின் நோக்கிலிருந்து மக்களை அணுகவில்லை என்பதுதான். நவீனத்தின் நன்மை, தீமை நவீன காலம் என்பது சடங்கு, சம்பிரதாயங்கள் நிறைந்த குழும வாழ்வின் பிடியிலிருந்து மனிதர்களை விடுவித்து சுதந்திரமாக சிந்திக்கவும், செயல்படவும் வைக்கும் பேராற்றலாக தோற்றம் தந்தது. அதே சமயம், தனி நபர்கள் சுயநல நோக்குடனும், பிறர் மீது கரிசனை அற்றும் நடந்துகொள்பவர்களாக மாற்றுவதாகவும் தோற்றம் தந்தது. பண்ணையடிமை முறையிலிருந்து விவசாயக்கூலியை மீட்டது புரசிகரமாயிருந்த அதே நேரத்தில், அதே நபரை இயந்திரங்களுடன் பிணைத்து வாழ்வை இயந்திர மயமாக்கிவிட்டது. பொருளுற்பத்தி, நுகர்வுச் சுழற்சியில் அனைவரையும் சிக்கவைத்து ஆன்மீக, அழகியல் பரிமாணங்களை அழித்துவிட்டதாக தோன்றியது. நகர்மயமாதல், தொழில்மயமாதல், பணத்தின் ஆதிக்கம், உறவுகளின் வீழ்ச்சி ஆகியவையெல்லாம் பெரும் தீங்குகளாக உருவம் கொண்டன. இறுதியாக சுற்றுச்சூழல் சீர்கேடு, வாழ்வாதாரங்களின் அழிவு என மிகப்பெரிய சிக்கல்களும் உருவாகியுள்ளன. ஐரோப்பிய கலை, இலக்கியங்கள் நவீன வாழ்வினை முதலில் இயற்கைசார் கற்பனாவாதத்தின் மூலமும், பின்னர் நவீனத்துவ வெளிப்பாடுகள் மூலமாகவும் எதிர்கொண்டன. ஆலிவர் கோல்ட்ஸ்மித் Deserted Village என்ற கவிதை நூலை 1770- ஆண்டு எழுதினார். கிராம சமூகம் சிதைவதை சோக காவியமாக பாடியது இது. 1987-ஆம் ஆண்டு வெளியான கோணங்கியின் “மதினிமார்கள் கதை”யில் இதே இழைகளை காணலாம். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்தில் தொடங்கிய கிராம சமூகங்களின் சிதைவு, தமிழகத்தின் கரிசல் மண்ணை முழுமையாகத் தாக்க அவ்வளவு காலம் தேவைப்பட்டுள்ளது என்பதுதான் வரலாறு. கோணங்கி மட்டுமல்ல. பெருமாள் முருகனின் “ஏறு வெயில்”, இமையத்தின் “கோவேறு கழுதைகள்” ஆகிய நாவல்கள்கூட கிராம சமூகத்தின் சிதைவு அல்லது நகரத்திற்குப் பெயர்தல் ஆகியவற்றை விடுதலையாக காட்டவில்லை என்பது முக்கியமானது. அதே போல எதேச்சதிகாரமும், போர்களும் நிறைந்த மன்னராட்சி முறையை விட நீதிபரிபாலன இறையாண்மை எனப்படும் சட்டத்தின் ஆட்சி, பொதுமைப்படுத்தப்பட்ட வாழ்வியல் நிர்வாகம் போன்றவையும் வரவேற்கத்தக்கவைதான். “சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம்” என்ற கொள்கையை மனுநீதிச்சோழனே அமல்படுத்தியிருந்தாலும், பாண்டியன் கொல்லன் பேச்சைக்கேட்டு அவசரப்பட்டு கோவலனை தூக்கிலிட்டதும் நடந்தது. மற்றபடி மன்னர், அமைச்சர், தளபதி, பிரபுக்கள் என்று யார் இரக்கமற்றவராகவோ, அறமற்றவராகவோ, கொடுங்கோன்மையாளராகவோ இருந்தாலும் மக்கள் பாடு திண்டாட்டம்தான். நடைமுறையில் இந்த எதேச்சதிகாரத்தன்மை தற்கால போலீஸ் ஸ்டேஷனில் கூட இருந்தாலும் (உதாரணம்: விசாரணை படம்), கருத்தாக்க அளவில் அனைத்தும் சட்டங்களுக்கு உட்பட்டுதான் நடக்கின்றன. அந்தக் காலத்தில் சட்டமே கிடையாது என்பதால் சுலபமாகவே எதேச்சதிகாரம் தலைவிரித்தாடலாம். ஆனால் சட்டத்தின் ஆட்சி, நீதிபரிபாலன இறையாண்மை ஆகியவற்றுடன் சேர்ந்து, ஓர் அருவமான நிர்வாக இயந்திரம் ஒன்றும் உருவாகிறது. எந்த தனிநபரும் ஒரு முடிவை எடுப்பதில்லை என்பதால், முடிவெடுத்தல் என்பது மிக சிக்கலான பல அடுக்கு அதிகார வலைப்பின்னலில் மாட்டிக்கொள்கிறது. ஒருவன் குற்றவாளியல்லன் என்று பொதுப்புத்திக்கு தெளிவாக தெரிந்தாலும் சட்டத்தின் முன் அதை நிரூபிப்பது பல சமயம் கடினமாகிவிடுகிறது. அதே போல குற்றவாளிகளும் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிக்கிறார்கள். இந்த நீதிபரிபாலன இயந்திரத்தின் அருவத்தன்மையை காஃப்கா தன் புகழ்பெற்ற “Trial” (1925- ஆம் ஆண்டு ஜெர்மன் மொழியில் வெளியானது) என்ற புதினத்தின் மூலம் உலகம் உணரச்செய்தார். மொத்த வாழ்வியல் நிர்வாகத்தை அரசு மேற்கொள்வதை விமர்சித்தும் ஏராளமான புதினங்கள் வெளியாகின. அவற்றில் பல எதிர்கால உலகில் அதிகம் இயந்திரமாக்கப்பட்ட வாழ்வில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டாலும் சமகால நிகழ்வுகளையும், போக்குகளையும் சுட்டுபவையாகவே இருந்தன. ஜார்ஜ் ஆர்வெலின் 1984 என்ற புதினம், (1949-ஆண்டு வெளியானது), ஆல்டஸ் ஹக்ஸ்லியின் Brave New World (1932- ஆம் ஆண்டு வெளியானது) போன்ற பல உதாரணங்களை சொல்லலாம். இப்போது நாம் ஒன்றை புரிந்துகொள்ளலாம். இலக்கியம் மற்றும் கலைகளில், இரண்டு போக்குகள் தோன்றி நிலைபெறுகின்றன. ஒன்று, நவீன காலத்தின் தனி நபர் உருவாக்கம், சுய உருவாக்கம் அல்லது தன்னிலை உருவாக்கம் என்பதற்கு ஒத்திசைந்த அன்றாட வாழ்வை நேரடியாகச் சித்தரித்து கதை சொல்லி, ஆடி போல் பிரதிபலித்து, குறைகளை சீரமைத்து நவீன கால சமூகத்தை உறுதிசெய்யும் எழுத்துக்கள், கலை படைப்புகள்; இரண்டு, நவீன காலத்துடன் அதிருப்தி கொண்டு சுய கலைப்பு, சுய நிச்சயமின்மை ஆகியவற்றையும், நவீன சமூக அரசியல் அமைப்பை எதிர்மறையாக சித்தரிக்கும் எழுத்துக்கள், கலை படைப்புகள். இந்த பிரிவினையை மிக திட்டவட்டமான எல்லைக்கோடாக கொள்ளாமல், தேநீரும் பாலும் கலந்துள்ள விகிதத்தை புரிந்துகொள்வது போல எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது ஒரு புதினம் நவீன பிரக்ஞையின் அடிப்படையில் உருவானாலும் நவீனத்துவ விமர்சனம் அதனுள் நுழைந்து அதன் தாக்கத்தை மடைமாற்றலாம். நவீன காலத்திற்கு மக்களை தயார் செய்ய விழைந்த எழுத்துக்கள், வெகுஜன கலை இலக்கியம், பண்டைய கலை இலக்கியம் ஆகியவற்றிலிருந்து பல கதையாடல் அம்சங்களை எடுத்துக்கொண்டு அவற்றை புதிய நவீன எழுத்துப்பாணியில் உருவாக்கிக் கொடுத்தன. கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திர கீர்த்தனை 1848-இல் வெளியான ஒரு முக்கியமான துவக்ககால உதாரணம். ஜாதி சமத்துவத்தை வலியுறுத்தும் நவீன பிரக்ஞையால் தூண்டப்பட்ட படைப்பிது என்று கூறமுடியும். அதன் காரணமாகவே 1935-இலும், மீண்டும் 1942-இலும் திரைப்படங்களாக இந்த கீர்த்தனை எடுக்கப்பட்டது. இன்னொரு விதமாக வகைப்படுத்தினால் நவீன சார்பு எழுத்துக்கள் மானுட வளர்ச்சியில், மேம்பாட்டில் நம்பிக்கைகொண்டு சமகால வாழ்வின் சிறப்புகளை கூற முக்கியத்துவம் தருபவை. நவீனத்துவ எழுத்துக்கள் அவற்றின் மீது தீவிர அதிருப்தியினை தெரிவிப்பவை. ஒரு சில எழுத்தாளர்களை ஒப்பிடுவதன் மூலம் நாம் இதை புரிந்துகொள்ள முயலலாம். கல்கி – புதுமைப்பித்தன் கல்கி தமிழின் நவீன உரைநடை வளர்ச்சிக்கு காரணகர்த்தகர்களில் ஒருவர். ஆனந்த விகடன் பத்திரிகையில் 1928 முதல் 1944 வரையில் இவர் எழுதிய விமர்சனங்கள், தலையங்க கட்டுரைகள், புதினங்கள் ஆகியவை தமிழ் பொதுவெளியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. 1944 முதல் 1956 வரை கல்கி என்று அவர் புனைபெயரிலேயே ஒரு பத்திரிகை ஆரம்பித்து அதிலும் நிறைய எழுதினார். அவருடைய அன்றைய தாக்கத்தால் இன்று வரை அந்த பத்திரிகை நிலைத்திருக்கிறது. கல்கியின் புதினங்களில் ஒரு தேசிய மனோபாவமும், மானுட வளர்ச்சி குறித்த நம்பிக்கையும் அடிப்படையாக இருக்கும். அவருடைய புகழ்பெற்ற புதினங்களான “சிவகாமியின் சபதம்”, “பொன்னியின் செல்வன்”, “அலை ஓசை” ஆகியவை மென்சோகத்தில் முடிந்தாலும் பெரும் வரலாற்று அசைவுகளை பரவசத்துடனும், நெகிழ்ச்சியுடனும் கூறுபவையாகவே அமைந்திருந்தன. தன் வாழ்நாளில் மிகப்பெரிய வாசக அங்கீகாரத்துடன் வாழ்ந்த இவர், பொதுவாழ்வில் செல்வாக்கு மிக்கவராகவும். கணிசமாக பொருள் ஈட்டுபவராகவும் வாழ்ந்தார். இவருடைய எழுத்தக்கள் அனைத்தையும் ஆழமாக பரிசீலிக்கும்போது அப்படியொன்றும் இவர் நவீனத்தின்மீது விமர்சனமற்றவர் கிடையாது என்பதை காணலாம் என்றாலும். பெருமளவில் இவரது எழுத்து தமிழ் நவீன பிரக்ஞையின் அடித்தளமாகவே அமைந்தது எனலாம். இவருடைய சமகாலத்தவரான புதுமைப்பித்தன் என்ற சொ.விருத்தாசலம் தன் புனைபெயரிலேயே தனக்கு புதுமை என்ற நவீனத்தின் மீதுள்ள ஈடுபாட்டை புலப்படுத்தியவர். ஆனால் இவர் நவீன காலத்தின்மீது அதிருப்தி கொள்ளும் நவீனத்துவ எழுத்தையே அதிகம் படைத்தவர். உதாரணமாக அவரது வாடாமலர் கதையில் ஒரு விதவை பெண்ணின் மேல் இரக்கம் கொள்ளும் சீர்திருத்தவாதி அவளை மணக்க முன்வருவான். அந்தப் பெண் என்னுடைய தேவையை புரிந்துகொண்டால் நாம் வேண்டுமானால் உறவு கொள்ளலாம்; ஆனால் இரக்கத்தின் பேரிலோ, அநுதாபத்தின் பேரிலோ ஒரு தியாகமாக என்னை மணக்க வேண்டாம் என்பாள். ஆனால் சீர்திருத்தவாதி அப்படி ரகசிய உறவு கொள்வது தவறு என்று சொல்லி மறுத்துவிட அவள் தற்கொலை செய்துகொள்வாள். இது விதவைகள் மறுமணம் என்ற புகழ்பெற்ற நவீன பிரக்ஞையின் வெளிப்பாட்டை மிக நுட்பமாக விமர்சிப்பதாக அமைகிறது. ஒரு பெண்ணிற்கு சுயேச்சையான உணர்வுகளுக்கு மதிக்காமல், சமூக விதிகளை மாற்றுவதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதன் மேம்போக்கான தன்மையை சுட்டுவதன் மூலம் தனி நபரின் உரிமை என்பதை கடந்து தனித்துவ பிரக்ஞையை வலியுறுத்துகிறது இந்த புனைவு. ஒரு வகையில் சொல்லப்போனால் இந்த கதையை புரிந்துகொள்வது என்பது நவீன தனிமனித பிரக்ஞையின் அடிப்படையான முரணை புரிந்துகொள்வதாகும்; தனக்கு தேவையான ஒன்றை செய்வதற்கு சமூக அங்கீகாரம் தேவை என நினைப்பதே தனி நபர் உரிமை என்ற முரண் சுலபத்தில் நம் கண்களுக்கு சிக்காது). புதுமைப்பித்தனுக்கு சமூக மாற்றத்திலோ, தேசிய விடுதலையிலோ நாட்டமில்லை என்று சொல்ல முடியாது. அவருக்கு ஒரு முற்போக்கான பார்வை இருக்கத்தான் செய்தது. ஆனால் அது வெறுமே தனி நபர் உரிமைகள், சட்டங்கள், வாழ்வியல் பொது நிர்வாகம் என்ற அடிப்படையில் திருப்தியுற மறுத்தது. “மகாமசானம்” என்ற கதையில் பெருநகர சாலையில் உயிர் துறக்கும் நிராதரவான மனிதனை சித்தரிப்பதன் மூலம் உருவாகும் நகர நாகரீகத்தின் அருவத்தன்மையை, ஈரமற்ற வாழ்வியலை விமர்சிக்கிறார். புதுமைப்பித்தன், மெளனி – நவீனத்திற்கு எதிரான அதிருப்தியும். மீட்பு வாதமும் புதுமைப்பித்தனுக்கு இணையானவராகவும். ஒரு சிலரால் அவரினும் சிறந்தவராகவும் கருதப்படும் அவருடைய சமகால எழுத்தாளர் மெளனி. இவருடைய கதைகள் மொத்தமே முப்பத்து சொச்சம்தான் என்றாலும், மிகவும் தனித்துவமிக்க நடையைக் கொண்டவை. இவருடைய கதைகள் அருவமான நிகழ்வுகள், திடமற்ற, தெளிவற்ற மனப்போக்குகள், முழுமையற்ற சித்தரிப்புகள் கொண்டவை. சில ஆழமான தத்துவப்பார்வைகளை இப்படிப்பட்ட கலங்கலான நிகழ்வுகள், மனப்போக்குகள் ஆகியவற்றின் மூலம் சுட்டுபவராக இருக்கிறார் மெளனி. குறிப்பாக இவர் கதைகளில் காதல் மற்றும் உறவின் சாத்தியங்கள் பெரும் சிக்கல்களாக வெளிப்படுகின்றன. ஒரு இறையியல் கோணத்தில் மானுட ஆன்மாவின் முழுமையின்மையை சமகால வாழ்க்கை சித்திரங்கள் மூலம் பரிசீலித்தவர் எனலாம். இவர் கதைகள் நவீன சமூக உருவாக்கத்தை அசெளகரியமான சூழ்நிலையாகவே படைக்கின்றன. ஆனால் கடந்த காலத்தின்மீதும், அதன் எச்சங்களின் மீதும் ஒரு வாஞ்சையை புலப்படுத்துகின்றன. இவரது கதைகளில் பல இடங்களில் வெளிப்படும் “அக்காலம் x இக்காலம்” என்ற எதிர்வு இவரை நவீன கால விமர்சகராக அல்லாமல், நிராகரிப்பாளராக, மீட்புவாதியாகவே காட்டுகிறது. தனிப்பட்ட வாழ்வில் ஜாதி ஏற்றத்தாழ்வை அனுசரிப்பவராகவே அவர் இருந்துள்ளார் என்று பிற எழுத்தாளர்களின் கூற்றில் வெளிப்படும்போது அதில் வியப்பதற்கு எதுவுமில்லை என்றே தோன்றுகிறது. பொருளாதார ரீதியாக கல்கி கீழ்மத்தியதர வர்க்கத்திலிருந்து வளர்ந்து செல்வந்தரானவர். புதுமைப்பித்தன் கீழ்மத்தியதர வாழ்க்கையிலும் பொருளாதார செம்மையுற முடியாமல்அலைக்கழிந்து மடிந்தவர். மெளனி வசதியான நிலவுடைமையாளர், தொழில் முனைவோர். புதுமைப்பித்தன் இறந்தபிறகு அவரது குடும்பத்திற்கான சகாய நிதி திரட்டுவதில் கல்கி மனமுவந்து ஈடுபட்டு உதவியுள்ளார். புதுமைப்பித்தனை சிறந்த எழுத்தாளர் என்று கொண்டாடியுள்ளார். மெளனிக்கும் கல்கிக்கும் எந்த தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. நவீன இலக்கியத்தை முன்னெடுத்த அரசியல் போக்குகள் இங்கு நாம் நவீன (modern) இலக்கியமென்பது நவீனத்துவ (modernist) இலக்கியமல்ல. இது நவீன தன்னிலையாக்கத்தையும், பொதுவெளி சமூக இயக்கத்தையும் கட்டமைக்க தலைப்பட்ட இலக்கியம். இதன் முதல் பகுதி காங்கிரஸ்காரர்களாலும், மேல்தட்டு நவீன சமூக மாற்றக்காரர்களாலும் முன்னெடுக்கப்பட்டது. பெரும்பாலும் ஆங்கில வெகுஜன புதினங்களை முன்மாதிரிகளாகக் கொண்டு எழுதினார்கள். வை.மு.கோதைநாயகி அம்மாள், வடுவூர் துரைசாமி ஐயங்கார் போன்றவர்கள் நிறைய நாவலகள் எழுதினார்கள். பின்னர் பெரியதொரு கீற்றாக கல்கி வந்தார். ராஜாஜி கூட நாவல் எழுதினார். நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டு ஜெயிலில் இருக்கும்போது, பின்னாளில் ஆந்திர முதலமைச்சரான காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோளை ஏற்று “மலைக்கள்ளன்” நாவல் எழுதினார். அதாவது தேச உருவாக்கத்திற்கு நாவல்கள் அவசியம் என்ற கருதுகோளின்படி தேச சேவையாகவே நினைத்து எழுதினார். இதையடுத்து பெரிய அலையாக திராவிட இயக்க தமிழ்ப்பற்று எழுத்தாளர்கள் தோன்றினார்கள். குறிப்பாக தி.மு.க தலைவர்கள் ஓவ்வொருவரும் ஒரு பத்திரிகை நடத்தினார்கள். அதில் அவர்கள் நாவல்களும் எழுதினார்கள். இவற்றில் பெரும்பாலானவை இன்று மறக்கப்பட்டுவிட்டன (அந்தக்கால காங்கிரஸ்காரர்கள் பலரின் எழுத்தும் மறக்கப்பட்டுவிட்டன). அண்ணாவின் ரங்கோன் ராதா, கலைஞரின் புதையல் போன்றவை திரைப்படமாக வந்த காரணத்தால் நினைவில் நிற்கின்றன. திராவிட இயக்கத்தினரின் நாவல்கள், நாடகங்கள் பலவற்றிலும் நீதிமன்ற காட்சி தவறாமல் இடம்பெறும். இவை நீதிபரிபாலன இறையாண்மை என்ற நவீன சமூக பரிமாணத்தை மக்களுக்கு விளக்கிக்காட்டுபவையாக அமைந்தனவோ என்று தோன்றுகிறது. “சட்டம் ஒரு இருட்டறை! அதில் வக்கீலின் வாதம் ஒரு கைவிளக்கு! ஏழைகளுக்கு எட்டாத கைவிளக்கு!” என்ற அண்ணாவின் வசனம் எப்படி அவர் நவீனத்தினை விமர்சன பூர்வமாகவும் அணுகுகிறார் என்பதைக் காட்டியது. பின்னாளில் திராவிட இயக்கத்தவரின் மனங்கவர்ந்த மிகப்பெரிய படைப்பாளியாக மாறியது மு.வ. என்றழைக்கப்பட்ட மு.வரதராசனார். திராவிட, தமிழ் தேசிய இலட்சியவாத நவீன சமூகத்தின் கதைமாந்தரை படைத்துக் காட்டுவதில் வெற்றிபெற்றவர் எனலாம். திராவிட இயக்க அலையை தொடர்ந்து, இடதுசாரிகள் எனப்படும் கம்யூனிஸ்டுகளும் பத்திரிகைகள் நடத்தினார்கள். நாவல்கள், சிறுகதைகள் போன்றவை ஐம்பது, அறுபதுகளில் கணிசமாக உருவாயின. இவர்களது நவீன சார்பு குறிப்பாக உள்ளடக்கவாதம் என்ற கலையின் ஊடகத்தன்மையில் இருந்தது. அதாவது எழுத்தோ கலை படைப்போ என்ன சித்தரிக்கிறது என்பதும், என்ன பரிந்துரைக்கிறது என்பதும் துல்லியமாக இருக்க வேண்டும். இது உலகளாவிய ஸ்டாலினீய நிலைபாடாக இருந்ததால் தமிழகத்திலும் பிரதிபலித்தது. மாக்ஸிம் கார்கியின் “தாய்” என்ற நாவலே இலக்கியத்தின் முன்மாதிரி என்று கட்சி வகுப்புகளில் கூறினார்கள். இவர்களிடம் வர்க்கம் சார்ந்த அதிருப்தி அதிகம் தொனித்ததால் கல்கி போன்ற, அல்லது மு.வரதராசனார் போன்ற ஒரு வெகுஜன சாதனையாளரை உருவாக்க முடியவில்லை என்று தோன்றுகிறது. இங்கு நாம் முக்கியமாகத் தொகுத்துக்கொள்ளவேண்டியது என்னவென்றால், காங்கிரஸ், திராவிட இயக்கம், கம்யூனிஸ இயக்கம் ஆகிய மூன்றுமே ஒரு இலட்சிய நவீன சமூகத்திற்கான தனி நபர், சமூக சித்திரங்களை உருவாக்க முனைந்தன என்பதுதான். நவீனத்துவ எழுத்து: சிறு பத்திரிகைகளின் பன்மை மைய நீரோட்ட கற்பனைகள் 18, 19 –ஆம் நூற்றாண்டு ஆங்கில/ ஐரோப்பிய புதினங்களை ஒட்டியே அமைந்தன. கல்கி கிருஷ்ணமூர்த்திக்கு, ஹெச்.ஜி.வெல்ஸ், வால்டர் ஸ்காட், அலெக்ஸாண்டர் டூமா உள்ளிட்ட பலர் முன்மாதிரி என்றால் வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி போன்றோருக்கும் பல ஜனரஞ்சக ஆங்கில எழுத்தாளர்கள் முன்மாதிரிகளாக அமைந்தனர். இந்த இலக்கியத்தின் முக்கிய பண்புகள் பிரதிபலிப்புத்தன்மையில் ஒருமுகப்படும் பன்முக யதார்த்தம், நேர்கோட்டு கதையாடலில் ஒருமுகப்படும் பன்மூலக காலம் போன்றவை. இவை நவீன தனிமனித பிரக்ஞை தன்னை முற்றானதாக கற்பித்துக்கொள்ள உதவுபவை. அதேபோல ஐரோப்பிய நவீனத்துவ எழுத்தால் தூண்டப்பட்டவர்கள் அதேபோன்ற மனநிலை கருத்துநிலைகளை சுவீகரித்து இலக்கியம் படைக்க தலைப்பட்டனர். மைய நீரோட்ட புனைவகளும் இரண்டு பிரிவுகளாக மாறுகின்றன. ஒரு பிரிவு வெகுஜன எழுத்து எனப்படும் வெகுமக்களின் உளவியல் கூறுகளை அனுசரித்து அதனூடாக நவீன கால பிரக்ஞையினை உருவாக்கும் எழுத்துக்கள் (கல்கி), அதிலே கேளிக்கைக்கும், தற்காலிக உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஜனரஞ்சக எழுத்துக்கள் (வடூவூர் துரைசாமி ஐயங்கார், நாஞ்சில் பி.டி.சாமி). இவை இரண்டுமே நவீன தன்னிலையாக்கத்திற்கு, மனநிலைகளுக்கு உரமாக அமைபவை. ஒன்று சிமெண்ட் பூசினால் இன்னொன்று அது இறுக்கமடைய தண்ணீர் ஊற்றும். இலக்கியம் என்பது பிரக்ஞையின் வளர்ச்சி, அல்லது தீவிர பாவம்; அதில் விமர்சனமும், அதிருப்தியும், முரணியக்கமும் வலுவடைய வேண்டும் என்ற எண்ணம் நவீனத்துவ இலக்கியத்தை “உயர்” இலக்கியமாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது. எட்டயபுரம் சுப்பிரமணிய பாரதி நவீனம், நவீனத்துவம் ஆகிய இரு வித்துக்களையும் தன்னிடையே கொண்டு தமிழ் மொழியின் மறுமலர்ச்சியாக வெளிப்பட்டார். இவர் ஒரே சமயம் தேசிய நவீனம், ஆன்மீக மறுமலர்ச்சி, இறையியல் பதிலீடான மானுட அழகியல் தேடல் ஆகிய அனைத்தையும் தன்னுடைய வீரியமிக்க படைப்புகளில் வெளிப்படுத்தினார். புதுவை கனக சுப்புரத்தினம் தன்னை இவரது தாசனாக வரித்துக்கொண்டு நவீன தமிழ் சமூக உருவாக்கத்திற்கான நவீன மொழிசார்ந்த தன்னிலைகளை உருவாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தேசிய இலட்சியவாதம், விமர்சன மனநிலை, அதிருப்தி ஆகியவற்றை இணைக்கும் புள்ளியாக அக்கிரஹாரத்து அதிசய மனிதர் வ.ராமசாமி மணிக்கொடி என்ற முதல் நவீனத்துவ வெளிப்பாட்டு தளத்தினை தோற்றுவித்தார். மணிக்கொடி சிறுபத்திரிகை அல்ல. ஆனால், பி.எஸ்.ராமையா ஆசிரியராக பொறுப்பேற்ற பிறகு அதில் இடம்பெற்ற படைப்பெழுத்தின் நவீனத்துவ தன்மை காரணமாக, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வணிக நோக்கமின்றி, பதிவு செய்யப்படாமல் “தனிச்சுற்றுக்கு மட்டும்” என்ற முத்திரையுடன் ஐநூறு பிரதிகள் வரை அச்சிடப்பட்டு நட்பு வலைப்பின்னல் மூலம் விநியோகம் செய்யப்பட்ட நவீனத்துவ இலக்கிய சிறுபத்திரிகைகள் மணிக்கொடியை தங்கள் முன்னோடியாகக் கொண்டன. மணிக்கொடியில் எழுதிய நவீனத்துவர்களை அவர்கள் விகடன், கல்கி. குமுதம் மூலம் பிரபலம் அடையாதவர்கள் என்று சுலபமாக அடையாளம் காண்பது வழக்கம். ஆனால் இதை பொதுவிதியாக மாற்ற முடியாது. பி.எஸ்.ராமையா, க.நா.சுப்ரமண்யம், சி.சு.செல்லப்பா எல்லோருமே ஐம்பதுகளில் தினமணிகதிர் என்ற தினமணி நாளிதழின் வாராந்திர இணைப்பில் எழுதியுள்ளார்கள். பொதுவாக இவர்கள் எழுத்து நாடகீயமற்ற அன்றாட வாழ்வை பேசுவது, நுட்பமான மன உணர்வுகளை படம் பிடிப்பது, வாசக யூகத்தை கோரும் பூடகத்தன்மை ஆகியவற்றை எளிமையான பிரதிபலிப்பு மற்றும் மரபு ரீதியான கதைசொல்லல் ஆகிய நவீன போக்குகளுக்கு மாற்றான நவீனத்துவ போக்குகளாக நிலை நிறுத்திக்கொண்டன. இவ்வகையில் எழுதப்பட்ட அனைத்துமே அழகியல் ரீதியாகவோ, வடிவ ரீதியாகவோ செழுமையாக அமையவில்லை என்றாலும் வெகுஜன மற்றும் ஜனரஞ்சக எழுத்திலிருந்து மாறுபட்டு இருப்பதாலேயே “நல்ல” “தரமான” இலக்கியமாக கருதப்பட்டன. இவ்வகை எழுத்தை உண்மையிலேயே சிறக்கச் செய்வது அதிருப்தி அல்லது வாழ்வில் நிறைவின்மை என்று கூறலாம். நவீனத்துவ அதிருப்தியில் பல நிலைகளை காணலாம். சுதந்திரவாத அதிருப்தி என்பது அரசின் மொத்துவத்துவ நிர்வாகம் என்ற அச்சிற்கு எதிரான அதிருப்தி. தீவிரவாத அதிருப்தி என்பது தனிநபராக்கம், அரச மொத்தத்துவம் இரண்டிற்குமே எதிரான அதிருப்தி. மீட்பு வாத அதிருப்தி என்பது நவீனத்தின் மக்களாட்சி சார்ந்த, சமத்துவம் சார்ந்த இலட்சியங்களையே புறக்கணிப்பது. இவற்றைத் தவிர வாழ்வியல், உளவியல், ஆன்மீக தளங்களில் ஏற்படும் மானுட நிராசை அல்லது நிறைவின்மை சார்ந்த அதிருப்தி என்பதும் மிக முக்கிய கூறாகும். ஒரு தேசியவாதியாகவும், முற்போக்கு சீர்திருத்தவாதியாக இருந்தாலும் சுதந்திரவாத அதிருப்தி, உளவியல், வாழ்வியல் சார் அதிருப்தி (ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன, சமூகம் என்ற நாலு பேர், ரிஷிமூலம், ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம்) ஆகியவற்றையும் சிறப்பாக தன் படைப்புகளில் வெளிப்படுத்திய ஜெயகாந்தனுக்கு மெளனியின் மாற்றம் என்ற கதையின் ஆன்மீக தள மானுட நிறைவின்மை சார்ந்த அதிருப்தி மிகுந்த ஈர்ப்பினை அளித்ததை நாம் ஆழமாக வாசித்து புரிந்துகொள்ளவேண்டும். இந்த அதிருப்தி அல்லது நிறைவின்மை தனது களங்களை சுலபமாக மாற்றிக்கொள்ள வல்லது. ஒரு வகையில் இலக்கிய சாதனைகளின் அடிநாதமாக எல்லா காலங்களிலும் இருந்தாலும் நவீனத்துவம் என்ற அளவில் அது நவீன பிரக்ஞையின் மீதான விமர்சனமாகவே துலக்கம் பெறுகிறது. அதாவது துன்பியல் நாடகங்களில் தொடங்கிய அதிருப்தியின் அதிர்வுகள், ஆத்மநாம், பெருந்தேவி, கோணங்கி, பா.வெங்கடேசன், யூமா வாசுகி, இமையம், ஃபிரான்ஸிஸ் கிருபா என்று பல்வேறு பெயர் வடிவங்களில் தொடர்கிறது. ஜெயகாந்தனிடம் அனலாக, கனலாக வெளிப்படுவது தி,ஜானகிராமனிடம் ஆற்று நீர் சுழிப்பாகவும், அசோகமித்திரனிடம் அருவமாக ஜன்னலை கடந்து உள்நுழையும் காற்றாகவும் வெளிப்படும். சமூகவியல் நோக்கிலான பன்மைத்துவ அழகியல் பார்வை நமது பிரச்சினைதான் என்ன? சுருக்கமாக இப்படி பார்க்கலாம்: “மானுட ஆற்றலின் விகசிப்பு, அது குறித்த பெருமிதம் பல்வேறு அடிமைத்தனங்கள், ஆதிக்கங்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றை மறுதலித்து அதிகார பரவலாக்கத்தையும், சுதந்திரம் என்ற இலட்சியத்தையும் நோக்கி மானுடத்தை நகர்த்தியதை கொண்டாடுவதா?” அல்லது “மானுடவாதமும். வரலாற்றுவாதமும் முழுமுற்றான தனிநபர், மொத்தத்துவ அரச நிர்வாகம் என்ற விபரீத முரணை தோற்றுவித்ததையும், எல்லையற்ற வளர்ச்சி குறித்த மமதையில் இயற்கையை கவின்மை நீக்கத்திற்கு (disenchantment) உள்ளாக்கி சூழலியல் சிதைவையும், இயந்திரமயமான உற்பத்தி-நுகர்வு சுழற்சியாக மானுட வாழ்வை சீரழித்தைதையும் இகழ்ந்து மறுதலிப்பதா?” இரண்டுமே உண்மைகள் என்று உணரும்போது எப்படி ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க முடியும் என்பதே சிக்கல். ஆனால் முதல் கூற்றின் கொண்டாட்ட மனநிலை ஒரு மாயையாகவும், இரண்டாவது கூற்றின் தர்க்கம் தீவிர பிரக்ஞையாகவும் தோற்றம் கொள்கையில் நவீனத்துவ எழுத்து அறிவாகவும், நவீன மனநிலை அறியாமையாகவும் தோற்றம் கொள்வது தவிர்க்க முடியாததாகிறது. இதன் விளைவாக நவீனத்துவ எழுத்தினை சார்ந்து இயங்குபவர்கள் எல்லாவகையான வெகுஜன, ஜனரஞ்சக எழுத்தையும் இகழ்வதும், புறக்கணிப்பதும் சுலபமாகிறது. இதன் விளைவாக உருவாகும் மேட்டிமைத்தனம் ஆபத்தான சமூக அற மறுப்பையும், எதேச்சதிகார மனபோக்கையும், மீட்புவாத சிந்தனையையும் உருவாக்க வல்லது. உண்மையில் ரசனை என்பது வேறு; படைப்பின் அழகியல் என்பது வேறு. ரசனை என்பது சுயத்தை ஆட்கொள்ளும்போது சுயம் எல்லா தருணங்களிலுமே நெகிழ்வதும் கலைவதும் இடம்பெயர்வதும் நிகழத்தான் செய்கிறது. உதாரணமாக ஒரு தத்ரூபமான நிலப்பரப்பு ஓவியத்தை ஆழ்ந்து ரசிப்பவன் அடையும் நெகிழ்ச்சியையும், டாலியின் அதீத கற்பனாவாத படைப்பினை ரசிப்பவன் அடையும் கிளர்ச்சியும் ஏற்படுத்தும் சுயகலைப்பு ஒன்றையொன்று ஒத்திருக்க முடியும். அதாவது படைப்புகள் முற்றிலும் வேறு, வேறு அழகியல் கோணத்தில் படைக்கப்பட்டிருந்தாலும், அவை அனுபவமாகும் வித்ததில் ஒத்த விளைவுகளை கொண்டிருப்பது சாத்தியமே. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தன் முன் சாந்நித்தியம் கொள்ளும் பிறிதின் உயிர்ப்பில் சுயத்தை இழப்பது அல்லது கலப்பது என்று வர்ணிக்கலாம். இதை இருப்பின் திறப்பு என முன்னொரு கட்டுரையில் வர்ணித்திருந்தேன். ஹரிச்சந்தரன் கூத்து அல்லது நாடகம் நடக்கும்போது அது உண்மையில் துன்பியல் முடிவை கொண்டிருப்பதில்லை. அவனுக்கு நடக்கும் துர்ச்சம்பவங்கள் எல்லாம் வேண்டுமென்றே விஸ்வாமித்திர்ரால் மேலுலகிலிருந்து பரீட்சார்த்தமாக உருவாக்கப் பட்டவை. ஆனால் அவன் தொடர்ந்து உண்மை பேசவல்லோனாக இருப்பதால் இறுதியில் அத்தனை சம்பவங்களும் பொய்த்துப்போக அவன் மீண்டும் முன்போலவே அரசனாகிறான் என்றுதான் அந்த நிகழ்வுகள் முடியும். ஆனால் லோகிதாசன் மரணமும், சந்திரமதி புலம்புலும் உச்சகட்ட சோகத்தின் வெளிப்பாடுகள். அழகியல் ரீதியாக இந்த படைப்பு சோகமாக முடியாமல் எல்லாம் சரியாகி இன்பத்தில் முடிவது மேற்கத்திய அழகியல் கோட்பாடுகளுக்கு முற்றிலும் ஒவ்வாததாக இருந்ததால் ஏ.பி.கீத் என்ற இலக்கிய வரலாற்றாசிரியர் இதை முட்டாள்தனமான கதை என்று வர்ணித்தார். தன் பால்ய வயதில் இந்த கூத்தை பார்த்த மோஹந்தாஸ் கரம்சந்த் என்ற குஜராத்தி சிறுவன் வாழ்நாள் முழுவதும் உண்மை பேசுவது என்ற உயர்பண்பை பேண முடிவு செய்தது பின்னாளில் பெரியதொரு அரசியல் சித்தாந்த்திற்கே வழி செய்தது. அழகு பார்ப்பவன் கண்ணிலிருக்கிறது என்று சகஜமாக சொல்லிவிடுகிறது பொதுப்புத்தி. குறிகளின் நர்த்தனமான வாழ்க்கையினுள் குறிகளின் நர்த்தனமாக கலை இலக்கியம் நிகழும்போது வாழ்வனுபவம் செறிவு கொள்கிறது. எப்போது எந்த ஒரு குறியின் அசைவு சுயத்தை நிர்நிர்மாணம் (deconstruct) செய்யும் என்பதை யாராலும் சொல்லமுடியாது. நிகழ்வதெல்லாம் பிரக்ஞைபூர்வமாக நிகழ்வதும் அல்ல. நான் பால்ய வயதில் கல்கியை வெகுஜன இலக்கியமாகவும் (அதாவது மரபின் செழுமை உட்செலுத்தப்பட்ட மனித மேம்பாட்டு கதையாடல்), சாண்டில்யனை ஜனரஞ்சக இலக்கியமாகவும் (அதாவது உணர்ச்சிகளை தூண்டி தற்காலிக இன்பத்தை அளிப்பது) பிரித்துப் பார்த்துதான் படித்தேன். அவ்விதமாக வாதிப்பதிலேயே என் பதின் பருவங்களை கழித்தேன். ஆனால் சாண்டில்யன் கதைகளிலிருந்து என் சுயம் எந்த நுட்பமான அதிர்வுகளையும் அடையவில்லை என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. உண்மையில் சாண்டில்யனின் ஜலதீபம் நாவலில் இதயசந்திரனின் ஆபத்து நிறைந்த பயணம், இலட்சியம் எல்லாம் அரசாங்கத்தின் தொடர்ச்சி (continuity of governance) என்ற கொள்கையில் அர்த்தமிழந்த விதம் என்னை மிக நுட்பமாக பாதித்ததை சமீபத்தில் நினைத்துப்பார்க்கும்போதுதான் உணர்ந்தேன். என்னுடைய அரசியல் பார்வைகளின் உருவாக்கத்தில் இதன் எதிரொலி எங்கோ இருந்து வந்திருக்கும் சாத்தியம் எனக்கு இன்றைக்கு புரிகிறது. ஜலதீபம் நாவல் கிட்டத்தட்ட சாஃப்ட் போர்ன் வகையைச் சேர்ந்தது எனலாம் (பாதி நாவல் நான்கு அழகிகளுடன் இதயசந்திரன் சல்லாபிப்பதுதான்) அதிலிருந்து கூட ஒரு நுட்பமான பார்வை என்னுள் சென்றிருப்பது எனக்கே ஒரு வியத்தகு செய்தியாகத்தான் இருக்கிறது. சமூகம் என்ற பரப்பு சமச்சீராக நவீனமடையும் போக்கினை கொண்டிருப்பதில்லை என்பதால் ஒரு புறம் தனி நபர் உருவாக்கத்தின் தேவையும், சுய உறுதிப்பாட்டின் தேவையும் இன்னொரு புறம் சுய கலைப்பின் தேவையும் நிகழலாம். ஒரு புறம் ஜனரஞ்சக ஆசுவாசமும், இன்னொருபுறம் நிறைவின்மையின் தகிப்பும் தேவைப்படலாம். எல்லோருக்கும் எல்லா தருணங்களுமான ஒற்றை அழகியலை சிந்திப்பது கொடுங்கோன்மையின் உச்சம். கணியன் பூங்குன்றன் சொன்னது போல “மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்ற அளவில் பல்வேறு ரசனைகளையும், அழகியல் தேவைகளையும் அங்கீகரிப்பதும் அதற்குள்ளாகவே பல்வேறு விமர்சன சட்டகங்களின் பெருக்கத்தை உருவாக்குவதுமே அறிவின் தர்மம். கோணங்கியையோ, நகுலனையோ வாசிப்பவர்கள் உயர்ந்த மனிதர்களாகிவிடுவதில்லை; ராஜேஷ் குமாரையோ, தேவிபாலாவையோ வாசிப்பவர்கள் மோசமானவர்களாக இருப்பதும் இல்லை. இலக்கிய அளவுகோல்களுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் நேரடியாக தொடர்பு இருப்பதில்லை. எதையுமே படிக்காத பாமர மக்களில் பலர் உன்னதமான பண்புகளை கொண்டிருப்பதே நமது சமூக எதார்த்தம். மானுட உணர்வுத் தாக்கங்கள் எனும் பெரும் நீரோட்டத்தில் ஏதோ ஒரு ஓரத்தில் உரசி விடப்படும் சந்தனம்தான் கலை இலக்கிய வெளிப்பாடுகள். மொத்த நீரோட்டமும் இதனால் நிர்ணயிக்கப்படுவதில்லை. சிறுபத்திரிகை தளம்: இலக்கிய மாண்பும், மேட்டிமைத்தனமும் தமிழ் சிறுபத்திரிகை தளம் என்பது எனது இருப்பின் விலாசம், அடையாளம், இன்னபிற. உண்மையிலேயே சமூகரீதியாக அநாதையாக, என் உணர்வுகளை, தேடல்களையும் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் யாராவது இருப்பார்களா, யாருடைய நட்பினை கொண்டு தொடர்ந்து வாழ்வது என்று புரியாமல் இருபது வயதில் முழுமையாக தனித்து விட்டது போல் நின்ற சமயத்தில் ”மானுடம்” என்ற சிறுபத்திரிகையின் மூலம் அறிமுகமானதுதான் திருச்சி வாசகர் அரங்கம். அதன் அரிய மனிதர்களும், அவர்கள் வழி நான் அறிந்து கொண்ட தமிழக நவீனத்துவ இலக்கியவாதிகளும், அவர்கள் படைப்புகளும், உலக இலக்கியமும், உலக திரைப்படங்களுமே எனக்கான திறப்புகளையும், பாதைகளையும் காண உதவின என்றால் மிகையாகாது. என் உறவினரிடமிருந்து அந்நியப்பட்ட வாழ்க்கை உற்றார்களான சிறுபத்திரிகை நண்பர்கள் பிடிப்பிலேயே இன்று வரை செல்கிறது. ஆனால் அவர்களில் பலருக்கும் எனக்கும் உள்ள மிகப்பெரிய முரண்பாடு தமிழ் வெகுஜன சினிமா, திராவிட இயக்கம் ஆகியவற்றை பற்றிய மதிப்பீடுகளில் நிகழும் வேறுபாடுகள்தான். கொஞ்சம் உரிமையுடன் சொன்னால் இவர்களில் இருவகையினரை காணலாம். ஒரு வகையினர் தங்களது சமூகவியல்/மானுடவியல் அறியாமையை அறியாமை என்றே புரிந்துகொள்ளாதவர்கள். தங்கள் மேட்டிமைத்தனத்தை சமரசமற்ற இலக்கிய ரசனை என்று நினைத்துக்கொண்டு அனைவரையும் இகழ்பவர்கள். இவர்களின் அழகியல் கோட்பாடுகளுக்குள் வராமல் செயல்படும் கலைஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் விபசாரிகள்; இவர்கள் மட்டுமே கனவிலும் கற்பினை இழக்காத புனிதர்கள் (இந்த பாலியல் உருவகங்களை இவர்களது மனநிலையை சுட்டவே நான் பயன்படுத்துகிறேன்). இவர்களது மேட்டிமை காழ்ப்பினை அறச்சீற்றம் என்றும் கூறிக்கொள்வார்கள். நான் சிறுபத்திரிகை வட்டத்துடன் உறவுகொண்டபோது இந்த வட்டத்தின் பொருளாதார ரீதியான வலிவின்மையும், அந்நியப்பட்ட மனநிலையும் கண்டு மிகுந்த கரிசனம் ஏற்பட்டது. மையநீரோட்ட கலாசாரத்திலிருந்து விலகிச் செயல்படும் சுய உறுதியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ”வாசன் மகனுக்கென்றால் மட்டும் அச்சுப்பொறிகள் அடிக்குமோ, முத்துசாமி போன்றவர் சொன்னால் மாட்டேனென்று மறுக்குமோ?... நம் கையிலும் இரண்டு காசுகளுண்டு, இனி தமிழை எங்கே நிறுத்தலாம்” என்ற ஞானக்கூத்தன் வரிகளும் ‘தெலியலேது ராமா தமிழ் நாவல் மார்க்கமு’ என்ற கவிதையில் “ஃபிராங்க்ளின் கொட்டைப்பிராந்து; முத்துசாமி செத்த எலி; செல்லப்பா சொல்லிட்டார்; நாப்பா போட்டுட்டார்” என்ற வரிகளிலும் தொனித்த சம்வாதத்தொனி எனக்கு மிகவும் உவப்பாக இருந்தது; இன்றும் இருக்கிறது. ஆனால் சிறுபத்திரிகை மனநிலை இத்தகைய ஆரோக்கியமான சம்வாத தொனியுடன் நிற்பதல்ல. மேன்மையான இலக்கிய ரசனையே மேன்மையான மனிதனை உருவாக்கும் என்ற மேட்டிமைத்தனத்தை நோக்கி கொண்டுசெல்லும் என்பதை வெங்கட்சாமிநாதன் என்ற நபரின் எழுத்துக்களில்தான் அறிந்துகொண்டேன். தன் பார்ப்பனீய சுயத்தை சிறு அதிர்வுக்கும் ஆளாக்காது பத்திரமாக வைத்துக்கொண்டு கலை எழுத்து என்று இந்த மனிதர் பேசி வந்ததும், இவரை ஏதோ அபூர்வ மனிதர் போல கொண்டாடுபவர்களும் இந்த சிறுபத்திரிகை சூழலின் மேட்டிமைத்தனம் என்ற விபரீத மனப்போக்கின் தலைசிறந்த உதாரணங்கள் என்பதே என் அனுமானம். அதைவிட பெரிய பிரச்சினை இதில் வந்து கலந்துவிடும் பார்ப்பன மீட்புவாத தூய்மைவாத மேட்டிமைத்தனம். இந்த வெங்கட்சாமிநாத வகையினர் அறிந்தோ அறியாமலோ பார்ப்பன அனுதாபிகள். 1982-இல் சிறுபத்திரிகை நவீனத்துவர்களை அறிமுகம் கொண்டது முதல் இன்று வரை இவர்கள் ஒரு கருத்தை ஓயாமல் என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். திராவிட இயக்கம் தமிழ் சினிமாவையும், தமிழ் சமூகத்தையும் சீரழித்துவிட்டது. இவர்கள் சுலபமாக இந்த முடிவுக்கு வந்து சேர்வதற்கான காரணங்களை நாம் இந்த கட்டுரையின் போக்கில் கவனித்த விஷயங்களுடன் சேர்த்து புரிந்துகொள்ள வேண்டும். திராவிட இயக்கம், எழுத்து செயல்பாடு எல்லாமே நவீன சமூகத்தை உருவாக்குவதையும், தனிமனித சுதந்திரத்தை நிறுவுவதாகவும் இருந்தது. இதற்கு அவர்கள் பூசாரிகளை மறுத்த பக்தி இயக்கத்தை பின்பற்றி, காதல் என்ற தனித்துவ ஆற்றலை கொண்டாடி தனி நபர் உறுதிப்பாடு, குடிமகன் என்ற கருத்தாக்கம், குடிமைச்சமூகம், நீதிமன்றம் ஆகியவற்றை மையப்படுத்தி சிந்தித்தார்கள். இவர்களது அதிருப்தி என்பது பழமையின் மீதானதாக மட்டுமே இருந்தது. மக்களை கவரும்படி எழுதவேண்டுமென்பதால் ஜனரஞ்சக அம்சங்களும் அதிகமாக இருந்தது. இதனால் இந்த இலக்கியங்கள் நவீனத்துவ அதிருப்தி அழகியலின் அம்சங்களை கொண்டிருக்கவில்லை. திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பங்கு மிகப்பெரிய சிக்கலான ஏற்றத்தாழ்வுகள், பிரிவினைகள் மிக்க சமூகத்தளத்தை மக்களாட்சிக்கு ஏற்ப தகவமைத்துதான். பெரியார் என்ற மாபெரும் புரட்சியாளரும், அண்ணாதுரை என்ற அரசியல் மேதையும், கலைஞர் கருணாநிதியும் தமிழகத்தினை நவீன சமூகமாக தகவமைக்க செய்த பங்களிப்புகள் மிகவும் கணிசமானவை. சிறுபத்திரிகை இயக்கம் அதிருப்தி சார்ந்த இயக்கம் என்பதால் சமூக மாற்றத்திற்கான திராவிட இயக்கத்தின் பங்களிப்பை அதனால் தொடர்ந்து கவனத்தில் கொள்ளமுடியாமல் போயிற்று. மணிக்கொடி நிறுவனர் வ.ராமசாமி, 1944 ஆம் ஆண்டு தமிழ் பெரியோர்கள் என்ற ஒரு நூலை எழுதினார். அதில் முதல் அத்தியாயத்தில் பெரிதும் கொண்டாடப்பட்டவர் ஈ.வெ.ராமசாமி பெரியார்தான். தமிழ் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் பெரியார் என்று மிக உறுதிப்பட அறிவித்தார் வ.ராமசாமி. ஆனால் அதற்குப் பின் சிறுபத்திரிகை இயக்கத்தை சார்ந்தவர்கள் பெரியாரின் மகத்தான வரலாற்று பாத்திரத்தை தொடர்ந்து பரிசீலிக்கவுமில்லை. பாராட்டவுமில்லை. எழுபதுகளில் சதங்கை என்ற பத்திரிகையில் வெளிவந்த “ஒரு இந்தியனின் பார்வையில் இந்திய தத்துவம்” என்ற கட்டுரையில் அம்ஷன்குமார் “இந்திய வரலாறு எத்துனை பழமையானதோ அத்துனை பழமையிலும் பெரியார் போன்ற ஒரு மனிதர் தோன்றியதில்லை” என்று எழுதினார் (நினைவிலிருந்து தரப்படும் மேற்கோள்). சிறுபத்திரிகையாளர்களுக்கு பெரியாரையும், அண்ணாவையும், திராவிட அரசியலையும் அணுக மிகவும் தடையாக இருந்தது அவர்கள் வெகுமக்கள் புரிதல், மனோநிலை ஆகியவற்றை அனுசரித்து இயங்கியதும் அவர்களுக்கான மொழியில் பேசியதும்தான். அந்த பேச்சுக்கள் கொச்சையான மொழியிலும் சம்வாதத் தொனியிலும் அமைந்திருந்தது நவீனத்துவ இலக்கியவாதிகளின் நுட்பமான பார்வைகளுக்கு உவப்பில்லாமல் இருந்ததில் வியப்பில்லை. அதே போல திராவிட இயக்கம் சார்ந்த சினிமா உரத்த வசனங்களும், அதீதமான உணர்ச்சிகரமான உறவுகளும். தற்செயல் திருப்பங்களுமாக நாடகீயமாக அமைந்ததால் அது சினிமாவே கிடையாது என்று கண்மூடித்தனமாக புறக்கணித்தனர். இன்று வரை புறக்கணிக்கின்றனர். சினிமா என்பது மேற்கத்திய சினிமாவின் வரையறைகளை பின்பற்றவேண்டும் என்பது தவிர இவர்களுக்கு சினிமா குறித்த எந்தவிதமான கோட்பாட்டு பயிற்சியோ தத்துவ பயிற்சியோ கிடையாது. அரசியல் ரீதியாக திராவிட இயக்கத்தின் மீது அநுதாபம் உள்ள தியோடர் பாஸ்கரனோ, அம்ஷன் குமாரோ கூட தமிழ் திரைப்படத்தின் அழகியல் குறித்து வித்தியாசமாக சிந்திக்க முயலாதவர்கள். ஓவியத்தை எடுத்துக்கொண்டால், பிக்காஸோ, எட்வர்ட் மன்க் ஆகியோரின் ஓவியங்களின் சிறப்பை கூறும் வெங்கட் சாமிநாதன், தமிழகத்தின் பிரச்சினை கொண்டைய ராஜவும், பாலு பிரதர்ஸும்தான், அதாவது நவீனபாணி காலண்டர் ஓவியங்கள்தான் என்னும்போது அழகியலின் பன்மை என்பதை அங்கீகரிக்க மறுத்து நவீனத்துவ கலையின் எதிரியாக வெகுஜன, ஜனரஞ்சக வெளிப்பாடுகளை நிறுத்துவதை துல்லியமாக பார்க்கமுடியும். பிக்காஸோ தோன்றிய சமூக, கலை வரலாறு, தத்துவப்பின்புலம் குறித்த அக்கறையின்றியே அவரை வெங்கட் சாமிநாதன் கொண்டாடுவதும், தி,ஜானகிராமன் நிராகரிப்பதும் நிகழ்ந்தது என்பதே உண்மை. உண்மையில் சிறுபத்திரிகை மனோபாவத்தை முழுமையாக புரிந்துகொள்ளவேண்டுமென்றால் ஒரே ஒரு கட்டுரையினை விரிவாக ஆராயந்தால் போதுமானது. அந்த கட்டுரை இந்திரா பார்த்தசாரதியால் ஆல் இந்தியா ரேடியோவில் உரையாக நிகழ்த்தப்பட்டு “கசடதபற” என்ற சிறுபத்திரிகையில் எழுபதுகளின் மத்தியில் வெளியானது. அந்த கட்டுரையின் தலைப்பு “ஒரு நூற்றாண்டில் முப்பது நூற்றாண்டுகள்”. அந்த கட்டுரையை கையால் படியெடுத்து வைத்துள்ளேன். சமீபத்தில் வெளியான கசடதபற தொகுப்பில் அது இடம்பெற்றதா என தெரியவில்லை. அந்த கட்டுரையில் இந்திரா பார்த்தசாரதி கூறுவது என்னவென்றால், மேற்கத்திய நவீன நாகரீகம் படிப்படியாக வளர்ச்சியுற்றதால் அது கொள்வன கொண்டு, களைவன களைந்து முன்னேறி வந்துள்ளது. அதனால் அங்கே நவீனத்துவ இலக்கியம் நல்லதொரு ஆங்கீகாரமும் மரியாதையும் பெற்றுள்ளது. அங்கும் வெகுஜன இலக்கியம், ஜனரஞ்சக இலக்கியம் எல்லாம் இருந்தாலும் அவற்றின் இடம் என்ன, நவீனத்துவ இலக்கியம் மற்றும் கலைகளின் இடம் என்ன என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இன்னம் நவீன பிரக்ஞை என்பது வேரூன்றவில்லை. தொழில்ரீதியாக விஞ்ஞானியாக இருப்பவன்கூட சந்திர கிரஹணத்தன்று தீட்டு போக நீராடுகிறான். தமிழகத்தில் உண்மையான பகுத்தறிவு புரட்சி நடந்திருந்தால், இன்னேரம் எல்லா மூட நம்பிக்கைகளும் களையப்பட்டு, நவீனத்துவ இலக்கியத்தின் மானுட விசாரத்தை, அதன் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்ளும் நிலை வந்திருக்கும். அப்படி உண்மையான பகுத்தறிவு புரட்சி நடக்காததால்தான் எத்தகைய கலை இலக்கியத்திற்கு எத்தகைய மரியாதையை தரவேண்டும் என்று யாருக்குமே தெளிவில்லாமல் இருக்கிறது. இந்த கட்டுரை மிக நுட்பமாக கூறுவது என்னவென்றால் நவீனத்துவ இலக்கியம் பெறும் அங்கீகாரமே நவீன கால பிரக்ஞையின் அளவுகோல் என்பதுதான். பெரியாரும், திராவிட இயக்கமும் எதையும் கிழிக்கவில்லை என்பது கூடுதல் சாராம்சம். தொடர்ந்து இந்த கட்டுரையை விரிவான வாசிப்புக்கு அடுத்த இதழில் ஆட்படுத்துவேன். இந்திரா பார்த்தசாரதி இளம் வயதிலேயே தில்லி சென்று அங்கு பேராசிரியராக இருந்தவர். பின்னர் போலந்தில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு எண்பதுகளின் இறுதியில் பாண்டிச்சேரி பல்கலைகழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். புனைவெழுத்தாளர், நாடகாசிரியர். வெங்கட் சாமிநாதனும் வெகுகாலம் தில்லியில் பணிபுரிந்தவர். அங்கிருந்தவண்ணமே தமிழ் சிறுபத்திரிகைகளில் எழுதியவர். அவர்களுக்கிடையே இணக்கமான உறவு நிலவவில்லை என்பதை வெங்கட் சாமிநாதனே விரிவாக பதிவு செய்துள்ளார். இதை எதற்காக சொல்கிறேனென்றால் “ஐயகோ! தாழ்ந்த தமிழகமே!” என்ற சிறுபத்திரிகை புலம்பலின் பரிமாணங்களுக்கு ஒரு உதாரணம் கொடுக்கத்தான். இந்திரா பார்த்தசாரதி எழுபதுகளின் தொடக்கத்தில் தினமணி கதிரில் ஒரு தொடர் எழுத ஒப்பந்தமாகிறது. அதன் தலைப்பு “அக்கரை சீமையிலே”. அவரது பயண அனுபவமா, அல்லது படித்தறிந்த விஷயங்களா என்பது நினைவில் இல்லை. பிரச்சினை என்னவென்றால், இந்த தொடருக்கான முன்னறிவிப்பினை வெளியிடும்போது ஓவியர் ஜெயராஜ் வரைந்த நீச்சலுடையில் ஒரு பெண்ணை படமாக போட்டுவிட்டார்கள். இதை வெங்கட் சாமிநாதன் கடுமையாக சாடியதுடன் இப்படியெல்லாம் சமரசம் செய்து கொண்டு “பெரிய” பத்திரிகையில் எழுதவேண்டுமா என்று இந்திரா பார்த்தசாரதியையும் சாடிய நினைவு. பின்னாளில் நான் கொலம்பியா பல்கலைகழகத்தில் ரோஷமான் படம் பற்றிய கட்டுரை ஒன்றிற்காக ஆய்வு மேற்கொண்டிருந்தபோது (என்னுடைய கதாநாயகனின் மரணம் நூலில் இந்த கட்டுரை இடம்பெற்றுள்ளது) ஒரு தகவல் என் கண்ணில் பட்டது. குரோசாவா படத்திற்காக அதிகமாகவே செலவு செய்துவிட்ட நிலையில் படத்தை போட்டுப்பார்த்த தயாரிப்பு நிறுவனம் பயந்து விட்டது (அவர்கள் பயந்தது சரிதான்; படம் ஓடவில்லை). ஆனால் படத்தில் நடித்த நடிகைக்கு மக்களிடையே வரவேற்பு இருந்தது. அதனால் அவர்கள் அந்த நடிகையை நீச்சலுடையில் சில புகைப்படங்கள் எடுத்து அந்த படங்களுடன் ரோஷாமான் படத்தை விளம்பரம் செய்தது தயாரிப்பு நிறுவனம். படத்திற்கு கிடைத்த சொற்ப வசூலில் அந்த விளம்பரத்திற்கு பங்கிருக்கலாம். வெனிஸ் திரைப்பட விழாவில் அந்த படத்திற்கு பரிசு கிடைக்கவில்லையென்றால் குரோசாவா என்பவரை யாரும் கேள்விபடவே நேர்ந்திருக்காது என்று கூட சொல்லலாம். ரோஷமான் படத்திற்கான நீச்சலுடை விளம்பரத்தை பற்றி படித்தபோது எனக்கு தினமணி கதிரில் இ.பா கட்டுரைக்கு ஜெயராஜ் போட்ட படம் நினைவுக்கு வந்தது. முதலீட்டிய வணிக முனைப்புகளுக்குள் கலை இலக்கியம் வரும்போது அது பாலியல் கிளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் எல்லா நாடுகளிலும் அதுதான் நிலை. ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒன்று நடந்துவிட்டால் சிறுபத்திரிகை தூய்மையாளர்கள் ஐயோ சீரழிவு என்று புலம்பு ஆரம்பித்து திராவிட இயக்கத்தின் கவர்ச்சி அரசியலில் வந்து முடிப்பார்கள். நீண்ட இந்த கட்டுரையின் அடிப்படை இழைகளை சொல்வதென்றால் பின்வருமாறு அமையலாம். உலகெங்கும் நவீன காலம் ஒரு விதத்தில் உற்சாகத்தையும், மற்றொருபுறம் கடும் விமர்சனத்தையும், அதிருப்தியையும் கலை இலக்கியத்தில் ஏற்படுத்தியது. வெகுஜன கலாசாரமும், நவீனத்துவ கலாசாரமும் தங்களுக்குள் முரண் கொண்டு வளர்ந்தபோது முதலீட்டியமும், வணிக ஊடகப் பரப்பும் ஜனரஞ்சக கலை இலக்கியத்தையும் தோற்றுவித்தன. தமிழக நவீனத்துவர்கள் கண்மூடித்தனமாக ஐரோப்பிய நவீனத்துவத்தை வழிபட்டதில் வரலாறு சார்ந்த, சமூகவியல் சார்ந்த பார்வைகளை முழுவதும் தவறவிட்டார்கள். திராவிட இயக்கத்தின் மகத்தான சமூக மாற்றப் பங்களிப்பை, இலக்கிய கலாசார மேட்டிமைத்தனத்தால் முற்றிலும் புறமொதுக்கினர். இத்தகைய நவீனத்துவ தீவிரவாதம் தவிர்க்கவியலாமல் பார்ப்பனீய மீட்புவாதத்துடன் கைகோர்த்தது. இங்கே நான் பார்ப்பனீயம் என்று நான் குறிப்பிடுவது ஒரு பிரமிடு போன்ற சமூக அமைப்பில் தங்களை மிக உயர்ந்து இடத்தில் இருத்திக்கொள்ளும் போக்காகும். பிக்காஸோவையும், எட்வர்ட் மன்க்கையும் கொண்டாடிய வெங்கட் சாமிநாதன் தன் வாழ்நாளின் இறுதியில் ஆர்.எஸ்.எஸ்.சார்பு இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதிவந்ததே இதன் குறீயீடு. அவருக்கு வாரிசாக இன்னொரு டில்லி வாசியாக பி.ஏ.கிருஷ்ணன் என்ற ஒருவர் சிறுபத்திரிகை பின்புலம் சார்ந்து உருவாகியிருப்பதும், அவர் இடதுசாரி என்று தன்னை சொல்லிக்கொண்டு பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் காழ்ப்புடன் எதிர்கொள்வதும் தற்செயலானது அல்ல. மிக முக்கியமான சமூகவியல் நிகழ்வேயாகும். கலை இலக்கிய மேட்டிமைத்தனம், சமூகவியல் மேட்டிமைத்தனத்துடன் இணையும் புள்ளி என்றுமே பார்ப்பனீய மனோபாவத்தை மறு உற்பத்தி செய்துகொண்டுதான் இருக்கும். இது வெங்கட் சாமிநாதன் என்ற வலதுசாரி முகத்துடனும் வரலாம்; பி.ஏ.கிருஷ்ணன் என்ற இடதுசாரி முகத்துடனும் வரலாம்.

No comments: