இன்றைய இரண்டு செய்திகள் படிப்பதற்கும் அறிவதற்குமான தொடர்பை யோசிக்க வைத்தன.
கல்வி அறிவு என்பது படிப்பறிவிலிருந்து வேறுபட்டது என்பது எளிய உண்மை மட்டுமல்லாமல் அடிக்கடி மறக்கப்படக் கூடியதாகவும் இருக்கிறது. தகவல்கள் சிந்தனைக்கு அடிப்படை என்றில்லாமல் தகவல்களே அறிவு என்று நம்பும் மத்திய தர வர்க்கம் உலகெங்கும் இருப்பது க்விஸ் நிகழ்ச்சிகளின் உலகு தழுவிய வெற்றியிலிருந்து புலப்படும். ஸ்வீடனின் தலைநகரம் ஸ்டாக்ஹோம் என்று தன் LKG குழந்தை பதில் சொன்னால் அது அறிவாளியாவதற்கு அறிகுறி என்று தமிழ்ப் பெற்றோர்கள் பலர் நினைக்கின்றனர். கூகிளுக்கு பிறகான உலகில் தகவல்களை கூகிள் அல்லது பிங் பொறுப்பில் விட்டுவிட்டு சிந்திப்பதை தன் அறிவாக மனித மூளைகள் கொள்ளுமா எனத் தெரியவில்லை.
குறளின் தெளிவு மனங்கொள்ளத்தக்கது. “அறிவுடையார் ஆவது அறிவார்.” ஆவது என்பது becoming என்ற ஆங்கில சொல்லைப்போல எதிர்காலத்தையும் பொருத்தத்தையும் ஒருங்கே சுட்டுவது. Unbecoming என்ற அர்த்தத்தில் ஆகாது என்ற சொல்லும் புழங்குவது உண்டு. எது சரியானதோ அதுவே எதிர்காலம். எது எதிர்காலத்திற்கு உகந்ததோ அதுவே பொருத்தமானது. எனவே ஆவது அறியும் அறிவு சமூக சீரமைப்பு, புனரமைப்பு, நாம் என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வல்லது. இத்தகைய அறிவு அமெரிக்காவிலும், தமிழகத்திலும் தேவைப்படுகிறது என்றே இந்த செய்திகளிலிருந்து தோன்றுகிறது.
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களை கொண்டதும், தன் முப்பது கோடி மக்களையும் கற்றவர்களாகக் கொள்ளக்கூடியதுமான அமெரிக்காவில் ஒரு காவலரின் அத்துமீறிய செயலை கண்டிக்கும் அறவுணர்வு அறிவினால் பெற முடியாததாக இருக்கிறது. தன் வீட்டின் சாவியை தொலைத்துவிட்ட கருப்பரான ஒரு புகழ்பெற்ற அறிஞர் வீட்டினுள் கதவை உடைத்து நுழைகிறார். இதைக்காணும் அண்டை வீட்டுப் பெண் யாரோ திருடனோ என நினைத்து காவல் துறைக்கு போன் செய்கிறார். காவலர் வந்து பார்த்தபோது வீட்டினுள் இருந்த அறிஞர் நடந்ததை விளக்குகிறார். வெள்ளைக்காரரான காவலருக்கு அதை ஆதாரபூர்வமாக உறுதி செய்து கொள்ளத் தோன்றுகிறது. அறிஞரின் அடையாள அட்டையைக் கேட்கிறார். அறிஞருக்கு கோபம் வருகிறது. என் வீட்டுனுள்ளேயே என் அடையாள அட்டையைக் கேட்கிறாயே? உன் அடையாள அட்டையைக் காட்டு என சத்தம் போடுகிறார். வாக்குவாதத்தில் வார்த்தைகள் தடித்து பல்கலைக்கழக பேராசிரியர் என்று தெரிந்த பிறகும் அவரை கை விலங்கிட்டு கைது செய்துள்ளார் அந்த காவலர். முறை தவறிய நடத்தை என்ற குற்றத்திற்காக.
இந்த சம்பவத்தின் அடிப்படையில் இனவெறி மனோபாவம் இருப்பது வெளிப்படை. தன் வீட்டினுள்ளேயே இருந்தாலும், அறிஞராக இருந்தாலும் கருப்பர் என்றால் சந்தேகத்திற்குரியவர்தான் என்ற மனோபாவம். இல்லாவிட்டால் அந்த காவலர் அடையாள அட்டையை கேட்டது அறிஞரை கோபப் படுத்தியிருக்காது. இனவெறி குறித்த நுண்ணுணர்வு கொண்ட காவலர் இப்பிரச்சினையை சுலபத்தில் மென்மையாகக் கையாண்டிருப்பார். பிரச்சனை பெரிதாகி ஊடகங்களில் அடிபட, அமெரிக்க அதிபரிடம் கருத்து கேட்டனர். அவர் தெளிவாகவும், பொருத்தமாகவும் காவல்துறை முட்டாள்த்தனமாக நடந்துகொண்டுள்ளது என்று கூறினார். பிறகு நடந்துதான் வேடிக்கை. காவல்துறையினர் திரண்டெழுந்து போராட, அதிபர் தான் உபயோகித்த வார்த்தைகள் பொருத்தமற்றவை என ஏற்றுக்கொண்டார். அறிஞரையும், அவரை கைது செய்த காவலரையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து பீர் பார்ட்டி கொடுத்தார். “உங்களை கைது செய்யாதவரை அந்தக்காவலர் பழகுவதற்கு இனிமையானவர்தான்” என்று கூறியுள்ளார் அறிஞர் கேட்ஸ். ஒரு இனவெறி மனோபாவம் கொண்ட காவலரின் அத்துமீறிய செயலை கண்டிக்க முடியாமல்தான் இருக்கிறது அமெரிக்க கல்வித்துறை. அமெரிக்காவை நினைத்து ஓயாமல் புல்லரிக்கும் தமிழ் உயர் மத்திய தர வர்க்கங்கள் அந்த காவலரின் புகைப்படத்தை வீட்டில் மாட்டி வைத்தாலும் வியப்பதற்கில்லை. “அங்கேயல்லாம் ரூல்ஸ்னா, ரூல்ஸ்தான் சார், யாராயிருந்தாலும் பார்க்கமாட்டான்” என்ற குரல் காதில் ஒலிக்கிறது.
இன்னொரு செய்தி, சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே புதிய விமான தளம் வரப்போகிறது. கூடுதலாக ரன் வேக்கள் அமையப்போகின்றன. வளர்ச்சிதேவதை காட்சிதரக் கண்டு களிகொள்கிறது தமிழர் மனம். இன்னொரு புறம் peak oil எனப்படும் எண்ணெய் உற்பத்தியின் உச்சம் கடந்து விட்டதா, இல்லையானால் எவ்வளவு விரைவில் அது நடக்கும் என விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. எண்ணெய் உற்பத்தியின் உச்சம் கடந்து விட்டதானால், எண்ணெய் தீர சில பத்தாண்டுகளானாலும் எரிபொருள் விலை ஏறித்தானாக வேண்டும். விமானங்கள் பறப்பது குறைந்துதானாக வேண்டும். ஏன் இந்த உண்மையை புதிய விமான தளம் பற்றிய திட்டத்தை குறித்து எழுதும்போது விவாதிக்க மாட்டேனென்கிறார்கள்? இப்படி ஒரு பிரச்சினையை நாம் எதிர்கொண்டேயாகவேண்டுமென ஊடகங்கள் ஏன் குறிப்பிடுவதில்லையென்பதே கேள்வி. பாமர மனநிலையில் இதற்கு அறிவியல் ஒரு மாற்றைக்கண்டுவிடும் என்பதே நம்பிக்கையாயிருக்கிறது. விவரமானவர்கள் cold fusion அணுசக்தியில் விமானங்கள் பறக்கலாமென்று நம்பலாம். ஆனாலும் விமானப் பயணங்களின் தேவை அதிகரிக்க வேண்டுமா என்ற கேள்வி அறிவுக்கு உகந்ததா இல்லையா என்பதை யார் சிந்திப்பது என்பது தெரியவில்லை. அறிவு என்பது ஆவதறிவது என்றால் நமது கல்வி அதைக் கொடுக்கிறதா என்பதே இன்று முக்கியமான கேள்வி. வளர்ச்சி பற்றிய சொல்லாடல்கள் மந்திரங்களைப் போல நம்பப்படலாமா என்று வள்ளுவர் வாழ்ந்த மண்ணில் சிந்திக்க வேண்டும் என்று சொல்வது தவறில்லை. நமது ஊடகங்களும் கல்வியும் அத்தகைய சிந்தனையை வளர்க்குமா என்பதுதான் பிரச்சினை.
Saturday, August 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment